அப்பண்ணாச்சாரியாரின் கண்களில் நீர் மல்கிக்கொண்டேயிருந்தது. நீரூற்றாய்ப் பொங்கி கன்னங்களில் வழிந்தோடியது.
அவரது கால்கள் தன்னிச்சையாக பஞ்சமுகி என்கின்ற கணதாளம் நோக்கி வேகமாய் நகர்ந்துகொண்டிருந்தன. அவரது எண்ணவோட்டம் இன்னும் படுவேகமாக முந்தியது. அவரது தோள்மீது தொங்கிய துணிமுடிப்பை மெல்ல அங்குள்ள மரநிழலில் இறக்கிவைத்தார்.
""யாரது? அப்பண்ணா ஸ்வாமிகளா? ஏதேது இவ்வளவு தொலைவு? ஸ்வாமிகளை விட்டு இவ்வளவு தூரம் தாங்கள் வரவே மாட்டீரே?'' என்ற அன்பான குரல் கேட்டு அப்பண்ணா திரும்பினார்.
அங்கு கோவிந்தராவ் என்பவர் இவரை நோக்கி வந்துகொண்டிருந்தார்.
அவர் கணதாளத்தில் மதிப்பிற்குரிய மனிதர். அவருடன் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஐவரும் தொடர்ந்துகொண்டிருந்தனர்.
""நீங்கள்... நீங்கள் யாரென்று எனக்குத் தெரியவில்லை. தவறாக எண்ண வேண்டாம்'' என்றார் அப்பண்ணா.
""ஹா... நீங்கள் எப்பேற்பட்டவர். ஸ்வாமி ராகவேந்திரரின் திவ்ய நிழல் நீங்கள் என்று கூறினா லும் அது மிகையாகாதல்லவா! ஜகத்குருவின் பிரதான சீடரை யாருக்குத் தெரியாமலிருக்கும்? நானோ இந்த சிற்றூரின் மணியம். என்னை அதிகம் தங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. எனது பெயர் கோவிந்தராவ். யாரங்கே, நல்ல சுட்டெரிக்கும் வெயிலில் நிற்கிறார். ஓடு... ஆகாரம் கொண்டு வா. கயிற்றுக்கட்டில் இருந்தால் நல்லது... அது மட்டுமின்றி...''
""வேண்டாம். நான் இங்குள்ளோருக்கு மிக முக்கிய செய்தி சொல்ல வேண்டியுள்ளது. ஸ்ரீராயர் வந்துபோகும் அந்த அனுமன் குகையருகே ஊரார் அனைவரையும் கூடவைத்தால், நான் மொத்தமாக அவர்களுக்கு ஸ்வாமிகள் கூறியதை அறிவித்துவிடுவேன்.''
""இதோ, இப்போதே செய்கிறேன் ஸ்வாமிகளே. தாங்கள் அதுவரை ஓய்வெடுத்தால் நல்லது.''
""இல்லை. இன்னும் சிறு தொலைவுதானே. நான் குகை முன்பாகச் சென்று காத்திருக்கிறேன். ஊராரை சீக்கிரம் வரவழைத்தால் ஏதுவாக இருக்கும்'' என்று கூறியவர் விடுவிடுவென நடக்கலானார்.
அப்பண்ணா அங்கிருந்த நீண்ட பாறையின்மீது சாய்ந்தவாறு நின்றுகொண்டிருந்தார். உள்ளுக்குள் பெரும் துயரம் மண்டிக் கிடந்தாலும் அதனைத் தன்னுள் அழுத்தி மறைத் துக்கொண்டு எதிரில் கூடியிருக்கும் மக்களிடம் உரையாற்றத் தொடங்கினார்.
""அன்பானவர்களே. நம் ஜகத் குரு ராகவேந்திரரின் பாதத் தொடர்பினை அடிக்கடி பெற்ற இம்மண்ணின் மைந்தர்களே! நீங்கள் பெரும் பாக்கியம் செய்தவர்கள். ஸ்வாமிகள் நினைத்த மாத்திரத்தில் எப்பேற்பட்ட துன்பங்களும் நம்மை விட்டகலும் என்பதை அனுபவத்தில் உணர்ந்தவர்களே... பல ஊர்களுக்கும் பல தேசங்களுக்கும் சஞ்சாரங்களை மேற்கொண்டு அங்கெல்லாம் சுபிட்சங்களை அருளிய மகான் இனி நிரந்தரமாகவே மாஞ்சாலத்தில் உறையவிருக்கிறார்'' என்று அவர் சமத்காரமாகப் பேசியதை மக்கள் சந்தோஷச் செய்தியாக நினைத் துக் கொண்டனர். அவர்களது சந்தோஷக் கூக்குரல் அடங்க சிறிது நேரமாயிற்று.
""அன்பர்களே! நீங்கள் அனைவருமே ராயருக்கு சேவை செய்யவேண்டிய சந்தர்ப்பம் உங்கள் அருகில் வந்திருக்கிறது'' என்ற அவரின் அடுத்த பேச்சில் வெகு ஜாக்கிரதை உணர்விருந்தது.
""என்னவென்று சொல்லுங்கள்... என்னவென்று சொல்லுங்கள் ஆச்சாரியாரே'' என்று மக்கள் சந்தோஷக் கூச்சலிடத் தொடங்கினர். சிறிது நேரம் அந்த ஜனங்களை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தவர், அவர்கள் ஆரவாரம் அடங்க அவகாசமெடுத்துக்கொண்டார். அது மெல்ல மெல்ல அடங்கியவுடன்-
""பாருங்கள்... பெரும் தவசீலர்கள் தங்களது தவவலிமையைப் பெருக்க நீண்ட தவம் மேற்கொள்வர். அதன்மூலம் பெற்ற பலன்களையும் புண்ணியங்களையும் இந்த உலகமக்களின் குறைதீர்க்கவே பயன்படுத்துவர். நமது ஸ்வாமி ஸ்ரீராகவேந்திரர் நமக்காக, இந்தப் பூவுலகோர் நன்மைக்காக தவமியற்றப் போகிறார். ஆம்; மற்றவர்களிலிருந்து மாறுபட்டு! ஒரு பிருந்தாவனம்... கல்லாலான பிருந்தாவனம் அமைத்து அதனுள் ஜீவனுடன் பிரவேசித்து நிரந்தரமாக நம்மைவிட்டு அகன்று அமரப் போகிறார்.''
கூட்டத்திற்கு மெல்ல புரிபடலாயிற்று. "இந்த ஆச்சாரியார் வெகு கெட்டிக்காரர். மக்கள் அனைவரும் துயரில் ஆழலாகாது என்று, திடுக்கென்று அவர் நம்மைப்பிரியப் போகிறார் என்பதை, பிரியமான வார்த்தை கோர்த்து இனிப்பாய் பேசி, பசுவைப் பரிவுடன் தடவும் பாச உணர்வினைத் தூவி சொல்லிக் கொண்டிருக்கிறார்' என்று புரிய, அவர்களுக்கு மெல்லிய தான திகில் எழுந்தது.
கோவிந்தராவ் மட்டும் சட்டென்று எழுந்து, ""ஐயோ... நீங்கள் ஸ்ரீராகவேந்திரர் நம்மைவிட்டு நிரந்தரமாய்ப் பிரியப்போகிறார் என்பதனை சுற்றிவளைத்துக் கூறுகிறீர்கள்'' என்றவர் மேற்கொண்டு தொடர இயலாது கண்மூடி கதறலானார். கூடியிருந்த மக்கள் அனைவரும் கதறலாயினர். அந்த பெருஞ்சத்தம் மரத்தில் இருந்த பறவைகளை அதிரச்செய்ய, அவை பயத்தில் கிளைகளைவிட்டு விருட்டென்று ஆகாயத்தில் செங்குத்தாகப் பறந்தன. மரத்திலிருந்த மந்திகளும் கலவரமாய்க் கிளைக்குக்கிளை தாவி மரமிறங்கி ஓடின. பின் தன்னிலை வந்து கூட்டத்தினை சுற்றிப் பரிதாபமாய் நின்றபடி தலையை உயர்த்தி உயர்த்திப் பார்த்தன. அவற்றுக்கும் என்ன புரிந்ததுவோ- அவற்றின் கண்களிலிருந்தும் கண்ணீர் சுரந்தது. அப்பண்ணா மௌனம் கலைத்தார்.
""நாம் என்னதான் மனம் உடைந்தாலும் கதறினாலும் இதுதான் நிஜம். இந்த நிதர் சனத்தை ஏற்றுக்கொண்டுதான் தீரவேண்டும் என ஸ்ரீராகவேந்திரரே ஸ்திரமாக வலியுறுத்தி, உங்களிடையே கூறும்படி பணித்த மேன்மை இது. ஆம்; மேன்மைதான் இது. ஸ்வாமிகள் தமிழகத்தில் பிறந்து வளர்ந்து, கற்று, சந்நியாசம் ஏற்றிருந்தாலும், அவர் நிரந்தரமாய் பிருந்தாவனஸ்தராவது இங்குதான் என்பது நாம் செய்த பாக்கியமல்லவா? அதனை நினைத்து ஆறுதல் கொள்ளுங் கள். அவர் பிருந்தாவனத்துள் இருந்து தவம்மேற்கொண்டு நமக்கெல்லாம் நிரந்தர மாய் அருள்பாலித்துக் கொண்டேயிருப்பார் என்பது உறுதி. இன்னும் நிரம்ப இடங்களுக்குச் சென்று அனைவரையும் நான் சந்திக்கவேண்டியிருக்கிறது. மாஞ்சாலத்தில் பெரும் பணிகள் நடக்கவேண்டி இருக்கின்றன. திவான் வெங்கண்ணா அவர்கள் தனியொருவராய் சமாளிக்க இயலாது. எனவே குருராயரின் பக்தர்களான நீங்கள் அனைவரும் ஸ்ரீமடம் சென்றோ திவான் மாளிகையிலோ அவரை சந்தித்து, உங்களுக்கான பிருந்தாவன வேலையைக் கேட்டுப் பெறுங்கள். எனக்கு விடைகொடுங்கள். முடிந்தால் நான் ஸ்ரீசைலம்வரை முதலில் சென்றுவர முடிவு செய்துள்ளேன். வருகிறேன்'' என்றவர் விடுவிடுவென இறங்கி நடக்க, அவர் கீழே வைத்திருந்த துணி மூட்டையை சுமந்து சென்று கோவிந்தராவ் அவரிடம் சேர்ப்பித்தார். ஒட்டுமொத்த கூட்டமும் அப்பண்ணாவை ஊர் எல்லைவரை பின்தொடர்ந்தது.
பாசத்திற்கும் பக்திக்கும் எவரொருவர் எல்லை வகுக்கவில்லையோ, அவர்வசம் ஆண்டவனே ஐக்கியமாகிவிடுவார் என்பது நிச்சயம். அப்பண்ணாச்சாரியார் ஸ்ரீராகவேந்திரர்மீது எல்லை யில்லா பக்தி கொண்ட நிர்மலமான ஆத்மா. அவர் தன்னிலை மறந்து நடந்து சென்றுகொண்டிருக்க, மனம் ஸ்ரீராகவேந்திரரிடமே தங்கிவிட்டது. கணதாளம் விட்டுப் புறப்பட்டு ஐந்து நாட்களாகிவிட்டன. வழியில் ராமாவரம் என்ற கிராமம் தொடங்கி ஒரு இடம்கூட மீதமில்லாது பிருந்தாவன நிகழ்வு பற்றி எடுத்துக்கூறியவண்ணம் நடந்து சென்றுகொண்டேயிருந்தார்.
நான்கைந்து பேராக கூட்டாக நின்று பேசிக்கொண்டிருந்தாலும், அவரும் சிரமம் பாராது நின்று பொறுமையுடன் நிகழ்வினைக் கூறிக்கூறி நகர்ந்து கொண்டேயிருந்தார். பெரும்பாலும் குடிநீருக்காக நீர்நிலைகளில் தண்ணீர் எடுக்கும் பெண்டிர், முதிய ஆண்களிடமும் பொறுமையாகப் பேசி, "மந்த்ராலயம் என்னும் மாஞ்சாலம் செல்லுங்கள்; ராயரை சேவியுங்கள்; ராயர் சேவை செய்யுங்கள்' எனக் கூறிக்கூறி தன் பயணத்தைத் தொடர்ந்துகொண்டே இருந்தார்.
வழியில் நடுவே பிச்சாலயா எனும் தான் வசித்த கிராமத்தில் பிருந்தாவன திருநிகழ்வினைக் கூற எண்ணம் கொண்டு நடக்கலானார். அப்பண்ணா மிக மிக இளைத்திருந்தார். தலைக்கேசம் கலைந்திருந்தது. கண்கள் தூக்கமின்றி வறண்டு, கருவளையம் தோன்றி சுகவீனத்தை வெளிப்படுத்தின. தண்ணீரைத் தவிர பெரும்பாலும் உணவின்மீது அவருக்கு நாட்டம் ஏற்படவில்லை. உதடும் உள்ளமும் ஸ்ரீராகவேந்திரரையே உச்சரித்துக்கொண்டிருந்தன. களைத்து, நடக்க சிரமம் ஏற்பட்டாலொழிய தன் பயணத்தை நிறுத்தியதில்லை.
மழை, வெப்பிற்கான வித்தியாசத்தை அவர் தேகம் உணரவில்லை. ராகவேந்திரரிடம் மனம் ஒன்றிவிட்டது. உடம்பு பசியறியாது போனாலும் பலவீனமாய்ப் போனது. தள்ளாடித் தள்ளாடிக் களைத்து பாதையோரம் சரிந்தார். மயக்கம் வருவது போலிருந்தது. மெல்ல மறுபடி எழுந்து, சிரமப்பட்டு நடக்கலானார். மனதுள் உறுதி மட்டும் எஃகு போன்றிருந்தது. மெல்ல மெல்ல நடந்து நதியோரம் உள்ள பாதைமீது உட்கார முயன்று அப்படியே படுத்துக்கொண்டார். கருமை யான அந்த பரந்த கற்பாறை, மாலை நேரமானபடியால் வெப்பத்தை வெளியேற்றிவிட்டு, நதிக்காற்றை வாங்கி தன்னை குளுமைப்படுத்திக் கொண்டதனால், அதில் படுத்திருந்த அப்பண்ணாவுக்கு சற்று இதமாய் இருந்தது. மெல்ல கண் மூடியவர் அயர்ந்துவிட்டார்.
அந்த ஒற்றையடிப் பாதையில் நடந்துவந்து கொண்டிருந்த ஒரு வாலிபன், பாறையில் படுத்திருக்கும் உருவம் தமது போதனா குரு போன்றிருக்கிறதே என அருகில் சென்று பார்க்க... ஆஹா... குரு அப்பண்ணாச்சாரியார் யாருமற்ற இந்த பரந்த வெளியில் பரிதாபமாய் வாய்பிளந்து உறங்குவது கண்டு, ஆற்றாமை யால் அவனுக்கு கேவலுடன் கண்ணீர் வந்தது. மூட்டையிலிருந்து உலர்ந்த பழங்களும், பக்குவப்படுத்தப்பட்ட திராட்சை, முந்திரி போன்ற உலர்ந்த உணவுகளும் அவரருகே சிதறிக்கிடந்தன. "ஐயோ... ஆசானே' என முகத்தில் அறைந்து கொண்டு அழுதவன், துணி மூட்டையில் அனைத்தையும் சேகரித்து வைத்தான். அருகில் தவழ்ந்தோடும் துங்கபத்ரை நதிக்கு ஓடோடிச் சென்று, கையிலிருந்த செப்புப் பாத்திரத்தில் நீர் முகந்து வந்து அப்பண்ணா முகத்தில் மென்மையாக விட்டு கைகளால் துடைத்தெடுத்தான். தனது தோளில் போட்டிருந்த ஈரத்துண்டை விரித்து விசிறினான். அப்பண்ணா கண் விழித்தார். களைப்பு, உடலெங்கும் வலி.
அவருக்கு குடிக்க நீர் கொடுக்க, ஆவலுடன் அருந்தலானார். எதிரில் நின்ற தன் மாணவனைக் கண்டு புன்முறுவலானார்.
""என்ன சுதாகரா. நலமா அப்பனே. என்னை எங்கு கண்டெடுத்தாய்'' என்றார் நகைச்சுவையாய். அழுக்கேறிய தனது ஆசானின் ஆடை சுதாகரனின் துயரத்தை அதிகப்படுத்தியது. எப்போதும் நதியில் குளித்து வெள்ளையுடுத்தும் வெண்தாமரையாய் சஞ்சரிக்கும் தனதாசான், அழுக்கேறிய உடலுடனும் உடையுடனும் கண்டது அவனுக்கு ஆற்றாமையைப் பெருக்கியது.
""ஸ்வாமி தங்களை இந்த கோலத்தில் பார்க்க மனம் தாங்கவில்லை. இது என்ன கோலம்? ஜீவனிழந்த தேகம், சோபை இழந்த வதனம். ஒளி பொருந்திய கண்களில் வலி நிறைந்திருக்க, உதடுகள் வெடிப்புகண்டு... ஐயோ ஆசானே!'' என பெருங்குரலில் அழலானான். அதற்குள் ஊருக்குள் தகவல் பரவ மக்கள் கூடத்தொடங்கினர்.
அப்பண்ணாவை கைத்தாங்கலாய் நடத்திவந்து, அவர் வகுப்பெடுக்கும் இடத்தில்- சாணம் மெழுகி, உயர கட்டப்பட்டிருந்த விசாலமான திண்ணை போன்ற அகன்ற இடத்தில் அமரவைக்கப்பட்டார்.
பழங்களை நறுக்கி வற்புறுத்திக் கொடுத்தனர். சுதாகரன் சற்று விசாலமான பாத்திரத்தில் சூடான பசும்பாலில் தேன் கலந்து, சில மூலிகைப்பொடி சேர்த்து அப்பண்ணாவுக்கு மிதச்சூட்டில் அருந்தக் கொடுத்தான். அனைத் தும் குடித்து முடித்தார் அப்பண்ணா.
ராயரின் பிருந்தாவனம் ஏகும் செய்தி பலர் தாவி பிச்சாலயா எட்டியிருந்தது. எனினும் யூகத்திற்கு உருவம் காண யாரும் முயலவில்லை. காரணம், அவர்களில் பெரும்பாலும் அப்பண்ணாவைத் தெரிந்தவர்கள் அநேகம். ஒன்று, அநேகர் அவரிடம் பயின்றவர்கள். இரண்டாவது, அவரிடம் பயின்றவர்களின் பிள்ளைகளாக இருப்பர். படித்தவரிடையே அப்பண்ணா வின் மதிப்பு உச்சமாக இருந்தது.
""எனதருமை மாணவர்களே! என்மீது நீங்கள் கொண்ட மதிப்பும் நம்பிக்கையும் என் மகிழ்ச்சியைக் கூட்டுகிறது. மந்த்ராலய மகானின் மகிமையைப் பரிபூரணமாக உணர்த்த உங்களிடம் நான் பேச விரும்பவில்லை. நிதர்சனத்தை மனதார ஏற்றுக்கொள்பவர்கள் நீங்கள். உங்கள் அனைவருக்கும் எனது வேண்டுகோள் ஒன்றுண்டு. நம் ராயர் இங்குவந்து தங்கியிருந்து நமக்குப் பல அனுகூலங்களைச் செய்திருக்கிறார். நமது கிராமத்தின் பெயர் சொல்லுமளவு உங்களது பணி மந்த்ராலயத்தில் பெருமளவு இருக்கவேண்டும். ராயர் எனக்கிட்ட கட்டளையை நான் சிரமேற்கொண்டு துரித கதியில் முடித்து மந்த்ராலயம் திரும்ப எண்ணியுள்ளேன்.
அந்த இறுதியான நாட்களில் நான் ஐயனின் அருகிலிருந்து சேவை செய்ய விரும்புகிறேன்.
அன்பிற்குரிய வெங்கண்ண ரிடம் நான் கூறியதாக நேரில் அவரை சந்தித்து, அவரது கடினப் பணிச்சுமையை நம் பிச்சாலத்தவர்கள் பகிர்ந்துகொள்ளுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கி றேன். இங்கு ஸ்ரீராகவேந்திரர் கண்மூடித் தவமியற்றிய அந்த விருட்சத்தினடி யில் தினசரி இனி தீபமிடுங்கள்.
அத்திருவிடத்தில் எவ்வித அசுத்தமும் அண்டாது பாதுகாத்து வழிபடுங்கள். நான் பணிமுடிந்து வருகையில் நிச்சயம் இங்கு மறுபடி வந்திருந்து மந்த்ராலயம் திரும்புவேன். ஸ்ரீராகவேந்திரரின் பிருந்தாவனப் பிரவேசம் உலகத்தின் உன்னத நிகழ்வு. மறுபடி பார்க்கவியலா திவ்ய நிகழ்வு.
அவர் வாழும் நாளில் நாமும் ஜீவித்திருக்கி றோம் என்பதே சிறப்பான ஒன்று. அதிலும் அவரின் பிருந்தாவனப் பிரவேசத்தினை நேரில் காணும் பாக்கியம் பெறப்போகும் நீங்கள் அதன்மூலம் இனி பிறப் பெடுக்காத வரம் பெறுவீர்களாக. நான் புறப்படுகிறேன். ராய்ச்சூர் தாண்டியும் செல்ல எண்ணம் கொண்டுள்ளேன். ஓம் ஸ்ரீராகவேந்திராய நமஹ'' என்று உரத்துக்கூற, கூடியிருந் தோர் அதைப் பிரதிபலிக்க, விண் அதிர்ந்தது. ஆயினும் அதில் சோகம் பிரதிபலித் தது.
ஸ்ரீமடத்தில், அநேகர் வந்திருந்தனர். அப்பண்ணா போகுமிடமெல்லாம் தகவல்களைத் துல்லியமாக சொல்லிக்கொண்ட செல்வதனால், மக்கள் தாங்கொண்ணா பிரிவுத் துயரை மனதுள் ஏற்று, அந்த துயர பாரத்தினால் ஸ்ரீராயரைப் பார்த்தே தீரவேண்டுமென்ற உத்வேகத்தில் மடம் நோக்கி வரத்தொடங்கிவிட்டனர். தினசரி கூட்டம் பெருகலாயிற்று.
மடத்துவாசிகள் வெகு கவனத்துடன் கூட்டத்தைக் கையாண்டனர். யாரும் குரல் எழுப்பி அழுதுவிடலாகாது; சிறிதளவில்கூட, அவர்மீதுகொண்ட ப்ரிய பக்தியினால் ஆர்ப்பாட்டம் உருவாகிவிடலாகாது என்ற எச்சரிக்கையுணர்வில் ராயரைக் காணும் தரிசன தூரத்தை அதிகரித்துவிட்டனர். ஸ்ரீராயர் பெரும்பாலும் இப்போதெல்லாம் கண்மூடி தியானத்தில் ஆழும் நேரமும் நீடித்துவிட்டது. தினசரி அதிகாலையிலேயே பக்தர்கள் கூட்டம் வந்துவிடுவதால், ராயரின் அன்றாட பூஜா பணிகள் தடையறாது நடக்க, மக்கள் பெரிய ஓலைவேய்ந்த நீண்ட குடிலில் அமைதியாக அமர வைக்கப் பட்டனர்.
வெங்கண்ணருக்குத் தகவல் தெரிவிக்கப்பட, அவர் அதனைத் துரிதமாக நவாப் சித்திக் மசூத்கானிடம் கூற, கோட்டைப் பணியாளர்கள்மூலம் சைவ உணவு தயாரித்து உடனுக்குடன் அவர் களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
""திவான் அவர்களே. மடத்தின் நிலைமையறிந்து உணவு தயாரித்து அனுப்ப காலதாமதமாகலாம். எனவே மடத்திற்கு வெகு அருகில் ஒரு சமையல் கூடத்தை நிரந்தரமாக நிறுவிவிடுங்கள். அரிசிக்கும் தானியத்திற்கும் காய்கறிக்கும் ஒரு சேமிப்புக் கிடங்கையும் அருகிலேயே அமைத்துவிடுங்கள். பாருங்களேன்... எவ்வளவோ தொலைவிலிருந்து புறப்பட்டு என் ராகவேந்திரரை தரிசிக்க வருவோரை பசியோடிருக்கச் செய்ய என் மனம் விரும்பவில்லை. ம்... புறப்படுங்கள். தாமதம் வேண்டாம்.''
""உத்தரவு நவாப் அவர்களே. "என் ராகவேந்திரரை தரிசிக்க வருவோர் பசியோடிக்க விரும்பவில்லை' என நீங்கள் கூறியதில், "என் ராகவேந்திரர்' என்று நீங்கள் சொன்னதிலிருந்தே அவர்மீது எந்தளவுக்கு பக்திகொண்டிருக்கிறீர்கள் என்பதை உணர்கையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்க நவாப். வளர்க தேசம். வருகிறேன் நவாப் அவர்களே.''
"திவான் அவர்களே. நானும் இனி ராயரை அடிக்கடி தரிசிக்கப்போகிறேன். மேலும் ஸ்ரீமடத்து நிலையை நேரில் கண்டால், எனக்கு மனதில் வேறேதேனும் தோன்ற வாய்ப்புண்டு. ம்... சென்றுவாருங்கள்'' என வழியனுப்பினார்.
தலைவணங்கி விடைபெற்ற திவான் வெங்கண்ணர், ஆதோனிக்குச் சென்றார்.
அங்கு தனது சமூகத்தவர்களில் திறம் பட சமைக்கும் மற்றும் அனுஷ்டானத் தைக் கடைப்பிடிக்கும் வல்லுநர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை மடம் நோக்கிச்செல்லப் பணித்து, தானும் மடம் நோக்கிப் பயணமானார். புரவிவிட்டு இறங்கிய வெங்கண்ணரைக் கண்டு வணங்கினான் முகுந்தன்.
""நல்வரவு. வணக்கம் திவான் அவர்களே! நேற்றே நம் ஸ்வாமிகள் தங்களைப் பற்றி விசாரித்தார். சற்று அமர்ந்து இளைப் பாறுங்கள். ஸ்வாமிகளிடம் அனுமதி பெற்றுவருகிறேன்'' என்றவன் உள்சென்று ஸ்வாமிகளிடம் விவரம் சொன்னான்.
""முகுந்தா... பூஜை நேரம், தியானம் மற்றும் வகுப்பு நேரங்கள் தவிர்த்து, மற்ற நேரங்களில் திவானுக்கு அனுமதி தேவையில்லை என்பதைப் புரிந்துகொள். மேலும் அவர் இங்கு அதிகாரி...''
""மன்னிக்க வேண்டும் ஸ்வாமிகளே. எங்களுக்கு நீங்கள் மட்டுமே அதிகாரி. மேலும்...''
""கவனம் முகுந்தா. இடம், பொருள், ஏவல். தங்க இடம் மட்டுமல்ல; ஆஸ்ரமும்... இதோ பிருந்தாவனம்வரை திவான் வெங்கண்ணரின் முயற்சி அளப்பரியது. எனது எண்ணத்தை தேராய் உருவாக்கி வடம்பிடித்து இழுத்து நிலைநிறுத்தியது வெங்கண்ணர் என்றால் மிகையாகாது. நீ இன்னும் கனிய வேண்டி யிருக்கிறது முகுந்தா.''
""ஸ்வாமிகள் என்னை மன்னித்தருள வேண்டும். என் தாயின் ஸ்தானத்தில் அப்பண்ணாச்சாரியார் அவர்களும் என்னை அநேகம் கண்டித்துள்ளார். என் சறுக்கல்களைத் தாங்கியுள்ளார். அவர் இல்லாதது எனது தடுமாற்றத்தை அதிகப் படுத்துகிறதோ... யான் அறியேன் ஸ்வாமி.'' சட்டென்று சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கோரினான்.
""பார், இப்போதும் நீ பதட்டமாகி விட்டாய். நிதானப்படு.''
""ஹா... எப்பேற்பட்ட உபதேசம். ஸ்வாமி, உலர் பழங்களை என்னிடம் வாங்கிப் புறப் படுகையில் சிறு உதாரணத்தில் நிதானத்தைக் காண்பித்துதான் அப்பண்ணா அகன்றார்'' என்றான்.
அவன் கண்ணீரில் நன்றி வழிந்தது.
""எங்கே கூறு... என்ன அப்பண்ணவால் உனக்குக் கூறப்பட்டது?'' ராகவேந்திரர் ஆர்வமானார்.
""தங்கள் அனுமதியுடன் கூறுகிறேன். "ஸ்வாமிகளின் குரல் கேட்கும் தொலைவில் இரு. எப்போதும் குளிர்நீராய் இருந்து கொள்' என்றார். எனக்கு அது புரியவில்லை என்பதால் விளக்கம் கோரினேன். ஒரு குவளையில் நீர் எடுத்து "இது என்ன' என்றார்.
"தண்ணீர்' என்றேன்.
"இதுவே குளிர்ந்தால்?'
"பனிக்கட்டி' என்றேன்.
"கொதித்தால்?'
"நீராவி' என்றேன்.
"மனிதன் குளிர்ந்தால் பனிக்கட்டியாய் நிலைத்திருப்பான். கொதித்தால் நீராவியாய் இல்லாது போய்விடுவான். எனவே நீ எப்போதும் குளிர்நீராய் இருந்துகொள்' என்றார் ஐயனே.''
""ஆஹா... அற்புதம். ஒருவனின் நிலைப்பாட்டை இதைவிட அற்புதமாய் யாரும் விளக்கிக் கூறமுடியாது. அப் பண்ணா எனது சீடன் என்பதில் எனக்குப் பெருமிதமாயுள்ளது. நல்லதப்பா. சரி சரி... உடனடியாக திவான் வெங்கண்ணாவை அழைத்துவா'' என்றார். முகுந்தன் வணங்கி வெளியே சென்றான்.
""வணக்கம் ஐயனே. காலதாமதமாய் நான் தங்களை சந்திக்க வந்ததற்கு மன்னிக்கவும்.''
""இன்னும் இரவே வரவில்லை வெங்கண்ணா. இதில் எங்கே காலதாமதம்? சரி, மன்னர் நலமா? அவருக்கு எனது ஆசிகள் கூறவும். அப்பண்ணா பற்றி ஏதேனும் தகவல் உண்டா?'' என்றார் கனிவுடன்.
""ஸ்வாமிகளின் கருணைக்கு எல்லை யில்லை. அதிலும் அப்பண்ணாமீது அதீதம் என்பது இப்போது நானே உணர்கிறேன் ஐயனே. ஆதோனி கடந்தும் சென்றிருக்கிறார்.
அதையும் தாண்டி கடப்பாவரை செல்வார் என்றும் நினைக்கிறேன்.''
""பயணம் நெடிது. தியாகம் அளப்பரியது. வழிநெடுகிலும் அப்பண்ணா சந்திக்கும் கஷ்டங்கள் அநேகம். இருப்பினும், என் மூலராமன் முன்னின்று காப்பான்.
ஜெயராமன் வெற்றி தரட்டும்.'' ஸ்வாமிகளின் கண்கள் அந்தரத்தில் அப்பண்ணா நினைவினைக் கொணர்ந்து, கைகள் இரண்டும் உயரே எழுந்து வாழ்த்தின.
அப்பண்ணா எப்பேற்பட்ட பாக்கியசாலி. அவர் எங்கோ இருந்தாலும், ஸ்வாமிகளின் கருணா நயனங்களில் அவர் நினைவில் வாத்சல்யம் மிகுந்து பொங்குவதை உணர்ந்து திவான் நெக்குருகினார்.
""ஸ்வாமிகளிடம் கூறவேண்டிய முக்கியங்கள் சில இருக்கின்றன. நவாப் அவர் களது அனுமதி பெற்று சில முன்னேற்பாடுகளை ஸ்ரீமடத்தில் செய்யவேண்டி, தங்களிடம் முன் அனுமதி பெற வந்துள்ளேன். நவாப் அவர்களும் இனி அவ்வப் போது வரவிருக்கிறார்.''
""நல்லது திவான் அவர் களே. அவை என்னவென்று நான் அறியலாமா?''
""ஆஹா... ஐயனே, தங்க ளின் அனுமதியுடன் கூற விழைகிறேன். ஸ்ரீமடத்தில் நாளுக்குநாள் மக்கள் வருகை அதிகமாகிறது. வெகுதொலைவிலிருந்து மக்கள் அனைவரும் அதிகாலையி லேயே வந்திருந்து தங்கள் தரிசனத்திற் குக் காத்திருக்கின்றனர். சிலபொழுது இரவும் தங்கிவிடுகின்றனர். மணல்வெளியில் துங்க பத்ரை அருகில் நிலவொளியில் படுத்திருந்து, மீண்டும் தங்களை தரிசிக்கும் அநேகர்கள் ஊர் திரும்ப மனமில்லாது திரும்புகின்றனர்.
அனைவருக்கும் நவாப் அவர்கள் வயிறார உணவளிக்க விருப்பம் கொண்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை முன்னிருந்து சிரத்தையுடன் செய்யப் பணித்திருக்கிறார்.''
ஸ்வாமிகள் புன்னகைத்தார்.
""நவாப் என்மீதுகொண்ட அளவில்லா அன்பிற்கு என் மூலராமன் அவருக்கு சௌபாக்கியங்கள் அனைத்தும் கிடைத்திட அருள்புரிவார். இம்மக்களையும், தேசம் கடந்துவரும் அனைத்து மதத்தவரையும் வேறுபாடு கருதாது சமத்துவமாய் பாவிக்கும் மனது எல்லாருக்கும் வராது. இத்தேசம் செழுமையாகட்டும். மும்மாரி பெய்து குளுமையாகட்டும். கால்நடைகள் வயிறார உண்ண பச்சைப்பசுமை சூழட்டும். ஸர்வே ஜனா: சுகினோ பவந்து.'' அந்த வாழ்த்துதலில் அகில உலகமும் அதில் அடக்கம் என்பது போன்ற பரந்த கருணை மேலோங்கி இருந்தது.
""மாஞ்சாலம் கிராமம் ஒருசில உணவுப் பயிர்கள் மட்டுமே விளையக்கூடிய பூமி. ஸ்ரீமடம் பன்னெடுங்காலம் நிலைத்து நின்று, வந்தவருக்கெல்லாம் வயிறார உணவளித்து, தற்காலிக உறைவிடமேனும் ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதும் தொலைநோக்கு எண்ணம். எனவே கைதேர்ந்த விவசாயக் குடும்பங்களை இங்கு குடியமர்த்தி, அவர் களுக்குத் தேவையான எல்லாவற்றுக்கும் கோட்டை யிலிருந்து ராஜாங்க உதவி கிடைக்கச் செய்ய வேண்டும். பிற்காலத்தினைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீமடத்தை மையமாகக் கொண்டு, அதற்கு எவ்வித இடையூறும் இல்லாத வகையில் நன்கு இடம்விட்டு குடியிருப்புகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சிறு கிணறுகள் அமைத்து, பூஜைப் பயன்பாட்டுக்கு பூந்தோட்டம், பெருமளவில் துளசி வளர்க்க தனியிடம் ஏற்படுத்தவேண்டும். அவற்றைப் பராமரிக்க அரண்மனை சம்பளத்தில் பணியாட்களை அமர்த்தவேண்டும். இதுபோன்ற அடர்ந்த திட்டங்கள் வகுக்கப்பட்டு, நவாப் அவர் களின் மேற்பார்வைக்கு அனுப்பப்பட்டு உடனடியாக ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது. இன்னும் வேறு திட்டங்கள் ஏதேனும் உதித்தால் அவற்றையும் பரிசீலித்து ஏற்றுக் கொள்ள நவாப் கட்டளையிட்டுள்ளார். மேலும், இவையனைத்துமே உங்களது அருட் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டு தங்களது ஒப்புதலைப்பெறப் பணித்துள்ளார். ஆதோனி நவாப் அவர்கள் தாங்கள் ஏதேனும் திருத்தங்கள் கூறினாலும் ஏற்றுக்கொண்டு உடனடியாகப் பணிகளைத் தொய்வில்லாது நிறைவேற்றப் பணித்திருக்கிறார்'' என்று பேசி நிறுத்திய திவான் தலைவணங்கிப் பணிந்து நின்றார்.
(தொடரும்)